என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..

Basics first. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?

*

திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய மறு ஆய்வுக்கான நேரம் வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளலாம், எங்களுக்கு அவர்கள் just heroes என்று. ஆனால் அதே ஹீரோ நமக்கு பிடிக்காத அல்லது நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நியாயமில்லாத செயல்களை செய்யும் பொழுது நமக்கு கோபம் வருகிறது. ஆனால் அதே போல வேறொரு ஹீரோ செயல்படும் பொழுது நமக்கு கோபம் வருவதில்லை. அந்த தனிப்பட்ட ஹீரோவின் மீது மட்டும் நமக்கு ஏன் கோபம் வருகிறது? அவருக்கு நம் மனதில் தனியானதொரு இடம் இருக்கிறது என்று அர்த்தம், இல்லியா?

*

ரஜினிகாந்த் ஒகேனகல் பிரச்சனையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார், அல்லது காலில் விழுந்திருக்கிறார், அல்லது குரங்கு பல்டி அடித்திருக்கிறார் அல்லது என்னமோ செய்திருக்கிறார், இதில் யாருக்கு என்ன பிரச்சனை? முதலில் கன்னட பிரச்சனையில் அவர் பேசியதே, உங்களை நினைத்து பயந்து தானே! எங்கே பேசாமல் போய்விட்டால் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ (அல்லது தனது சம்பாதிப்பு தடைப்படுமோ!) என்கிற காரணத்தினால் தானே. அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகளான நீங்கள், உங்கள் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து சொல்லுங்கள் பார்ப்போம், எந்த தருணத்திலாவது நீங்கள் தங்கி பிழைப்பு நடத்தும் நாட்டுக்கு ஆதரவாக, உங்கள் தாய்நாட்டுக்கு எதிராக குரல் நீங்கள் கொடுப்பீர்களா? கன்னடத்திற்கு தமிழ்நாட்டிற்கும் இடைய இருக்கக்கூடிய இந்த பிரச்சனை ரஜினிகாந்துக்கு ஒரு தர்மசங்கடம். இங்கேயும் பகைச்சுக்கமுடியாது, அங்கேயும் பகைச்சுக்க முடியாது. அங்கே அவரது இரத்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றனர். இங்கே அவரது ரசிகர்கள் (மற்றும் சொத்துக்கள், மேலும் இனி சம்பாதிக்கப்போகும் சொத்துக்கள்) இருக்கின்றனர். மேலும் ரஜினிகாந்தின் உண்மையான மனநிலையை அவர் மட்டுமே அறிவார். மற்றவர்கள் சொல்லுகிற படி காசுக்காக சுயமரியாதையை இழப்பவராக இருக்கலாம், அல்லது என்ன செய்வது என்கிற தர்மசங்கடத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். யாரறிவார்?

*

ரஜினிகாந்த் எதற்காக குரல் கொடுத்தார்? கலவரத்தை தூண்டுபவர்களை உதைக்கவேண்டும் என்று யாருக்காக சொன்னார்? தர்மசங்கடத்தில் சொன்னாரோ அதர்மசங்கடத்தில் சொன்னாரோ, சொன்னாருல்ல? நமக்காகத்தான சொன்னார்? தமிழர்களுக்காகத்தான் குரல் கொடுத்தார்? பின் விளைவுகளை பற்றி யோசித்தாரா? (சாரி கேட்டுக்கிட்டா போச்சுன்னு யோசிச்சாரோ என்னமோ?!) அதற்கு வாட்டாள் என்ன சொன்னார்? அவர் எப்படி கன்னடத்துக்குள் வருகிறார் என்று பார்ப்போம், அவரது படங்கள் எப்படி இங்கே திரையிடப்படுகிறது என்று பார்ப்போம் என்று சொன்னார் அல்லவா? நமக்காக குரல் கொடுத்த அவருக்கு பிரச்சனை வருகிறது என்கிற பொழுது நாம் என்ன செய்தோம்? ரஜினிகாந்துக்கும் ராமதாஸ¤க்கும் நடந்த பிரச்சனைகளில் நாம் என்ன செய்தோம்? காற்று போன பலூன் என்று திரு.ராமதாஸ் அவரை புகழ்ந்த பொழுது, இன்று அவரை தமிழனத்துரோகி என்று வர்ணிப்பவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள்? இல்லை என்ன செய்ய முடியும்? படம் பார்க்கிறோம் படம் பார்க்கிறோம் என்று சொன்னால், thats just for our entertainment. அதும் திருட்டு வீசிடியில் பார்த்துவிடுகிறோம். அதை தவிர அவருக்கு என்ன நாம் செய்திருக்கிறோம்? அப்படியும் பாபா படம் தோழ்வியைத்தானே தழுவியது. நாம் அவரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறோம் என்றால் பாபா படம் பிச்சுக்கிட்டில்லா ஓடிருக்கனும்? பாபா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய பொழுது “நல்ல சினிமா” (அவர்களுடைய பிரச்சனை) என்று தானே சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறோம்? நாம் அவரை நமது entertainmentக்காக மட்டும் உபயோகிப்போம், ஆனால் அவர் நமக்கு முதல்வரைப் போல நல்ல (?!) காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படி? அவர் யோசிப்பாருல்ல. என்னடா இப்படி தமிழ்நாட்ட நம்பி நம்ம நாட்ட பகைச்சுக்கிட்டோமே, இப்ப என்ன பண்றது. இவிங்க சும்மா சும்மா தலைவர் தலைவர்ன்னு தான் சொல்றாய்ங்க, கண்டிப்பா மத்த எல்லாரையும் (சிவாஜி, டிஆர், பாக்யராஜ், ராமராஜன்) கவுத்தத போல நம்மையும் கைவிட்டுருவாய்ங்கன்னு நினைப்பாருல்ல. நினைக்கறதில்ல என்ன தப்பு? மேலும் அன்றைக்கு, ஒகெனக்கல் பிரச்சனையில் எல்லா நடிகர்களும் அவேசமாக பேசிவிட்டு பிரச்சனையை பெரிதாக முடிக்கிவிடும் தருணத்தில், தமிழக அரசு எதற்காக ஜகா வாங்கியது? எதற்காக தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்தது? குசேலன் பட ரிலீசுக்கு முன்னால் ரஜினி மன்னிப்பு கேட்டது சுயநலம் என்றால் இது எந்த வகை? நீங்க தேவைப்படும் போது பிரச்சனைய கிளப்புவீங்க. மேடை போடுவீங்க. ஊர்வலம் போவீங்க. வேண்டாம்னு நினைச்சா பிரச்சனைய மூட்டகட்டிட்டு, இன்னொருநாள் பாத்துக்கிடலாம்னுட்டு போவீங்க. நாங்க எங்க businessஅ இழக்கனுமா? அப்படீன்னு கூட அவர் நினைத்திருக்கலாம். யோசித்திருக்கலாம். நியாயம் இருக்குல்ல?

*

குசேலன் படத்தில் இருந்த அந்த அரசியல் வசனத்தை நீக்கிவிட்டதாக படித்தேன். அந்த வசனம்: எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்னு சொன்னீங்கல்ல, (ரஜினி தன் வாழ்நாளில் தான் பேசிய வசனத்துக்காக ரொம்பவும் வருந்துகிறார் என்றால் அது இந்த வசனமாகத்தான் இருக்கவேண்டும்)அது ஏன் சொன்னீங்க? (என்ன மயித்துக்கு சொன்னன்னு சுந்தர்ராஜன் கேட்ப்பார்) ரஜினி: அது அந்த திரைப்படத்தின் வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வசனம். நான் பேசினேன். நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்றது. (இது கரெக்டான வசனம் இல்லை. என் ஞாபகத்தில் இருந்தது)

இந்த வசனத்தை ஏன் நீக்கவேண்டும்? ரசிகர்களின் மனது புண்படுகிறதாம். நிறைய கடிதங்கள் வந்தனவாம். அடச்சே! திருந்தவேமாட்டீங்களாப்பா? அவரு தான் சொல்லிட்டாருல்ல. அப்புறம் வசனத்தை நீக்குவதால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது? ரசிகர்கள் சங்கடப்படவில்லை. ரஜினியின் ரசிகர்கள் விசித்திரமானவர்கள். எத்தன அடிச்சாலும் தாங்குவாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. மற்றவர்கள் ரஜினியை கேவலமாக பேசுகிறார்களே என்கிற காரணத்தால் மட்டுமே, அவர்கள் வசனத்தை நீக்கவேண்டும் என்று விரும்பியிருப்பார்கள்.

*

எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. குசேலன் படம் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் தான் ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்போ சாரியோ பூரியோ கேட்டிருக்கிறார். இப்படி கேட்பதால், தன்னுடைய படம் ஓடுவதற்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று தான் இப்படி பல்டி அடிக்கிறார் என்பதை நேத்து பிறந்த குழந்தை கூட சொல்லும். அது ரஜினிக்கு தெரியவில்லையா? நம்மை முழு சுயநலவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பதை அவர் யோசிக்கவில்லையா? அப்படியா, அவ்வளவு மோசமாகவா அவருடைய அலோசகர்கள் இருக்கிறார்கள்?

அதாவது; நாம் நம் குடும்பத்தினருடன் இன்று சண்டை போட்டுக்கொள்ளலாம், நாளை சேர்ந்துவிடலாம். சாரி கேட்கத்தேவையில்லை. அடுத்தவனுடன் சண்டையிட்டால், கண்டிப்பாக சாரி கேட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் மூக்கை உடைப்பான்.

அப்பா அம்மாவுடன் சண்டை போட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனுடன் சமாதனமாக போய்விடுவது உசிதம். அப்பா அம்மாவை எப்படின்னாலும் சரி கட்டிடலாம். என் செல்ல அப்பா என்றோ என் செல்ல அம்மா என்றோ இல்லை என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய அப்பா அம்மா என்றோ ஏதோ ஒன்றை சொல்லி சரிக்கட்டிடலாம். சரிக்கட்டிடலாம்.

*

அதனால் தான் சொல்கிறேன், திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் மறுமதிப்பீடு செய்யவேண்டிய முக்கியமானதொரு தருணத்தில் இருக்கிறோம். இல்லையேல் ரஜினி நாளைக்கு அவருடைய மகளிடமோ மனைவியிடமோ மருமகனிடமோ சாரி கேட்டால் கூட நாம் அவரது போஸ்டர்களை கிழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

*

2 thoughts on “என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..

  1. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?//சினிமாவுக்கும் அரசியலுக்கும் (அரசியலுக்கு வர சினிமாவை உபயோகிப்பவருக்கும்) உள்ள சம்பந்தம்

    Like

Leave a comment